சென்னை: இந்து கடவுள்களை இனி விமர்சிக்க மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் மோகன் சி லாசரஸ். இவரது குடும்பம் இந்து மதத்தைச் சார்ந்தது. இடையில்தான் இவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, மதபோதனை செய்து வருகின்றனர். ஏழ்மையில் உள்ள இந்துக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களை மதம் மாற்றி வருகிறார் மோகன் சி லாசரஸ். அதற்காக, கிராமங்களுக்கு இலவச வேன் வசதிகளும் செய்து வருகிறார். ‘ இயேசு விடுவிக்கிறார் ‘ என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, மத போதனைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்து கடவுள்களை விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இது அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஆவடியில் நடத்திய மதபோதனை கூட்டத்தில் பேசும்போது, இந்து மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மோகன் சி.லாசரஸ் மீது பல வழக்குகள் பதியப்பட்டன.
இதை எதிர்த்து, தன்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மோகன் சி.லாசரஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை, நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மோகன் சி. லாசரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பல்வேறு கருத்துக்களை கூறியதுடன், மோகன் சி லாசரஸ் நேரடியாக இந்து கடவுள்களை விமர்சிக்கவில்லை என்றும், பொதுமக்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் அளித்துள்ளார் என்றார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர்தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க மோகன் சி லாசரஸ் தயாராக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் தெரிவித்து, மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் கூறியிருந்தார். மோகன் சி.லாசரஸின் வருத்தத்தை புகார்தாரர்கள் ஏற்றுக் கொள்வதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமான உத்தரவை பிறப்பித்தார். அவரது உத்தரவில், ”நமது நாடு பன்முகத் தன்மைக் கொண்டது. நாட்டில் உள்ள மதம், கலாசார உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்த சூழலில் மதபோதகர்கள் மிகுந்த கவனத்துடன் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, “தங்கள் மதம் பெரியது எனக் கூறி மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது, பிற மதங்களை இழிவு படுத்தக் கூடாது மற்ற மதங்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது. எந்தவொரு மதத்தையும், கடவுளையும் தவறாக சித்தரித்து கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டியது இல்லை என இயேசு நாதரே கூறியிருக்கிறார். எனவே, மதபோதனைகள் மற்ற மதத்தினரை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்று எச்சரித்ததுடன், அவரது வருத்தத்தை ஏற்றுக்கொண்டு, மனுதாரர் மோகன் சி.லாசரஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்கிறேன்” என்று தெரிவித்தார்