பெங்களூர்:
கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பரபரப்பான தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும், சக்கர நாற்காலியில் பாராளுமன்றம் செல்ல நான் விரும்பவில்லை என்றும் கூறினார்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை கடந்த 27ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மே 12ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில், தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலை யில், கர்நாடக மாநிலத்தின் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 28ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால் அடுத்து ஆட்சியை பிடிக்க பாஜக ஒரு புறமும், ஜனதாதள் எஸ் கட்சி மற்றொரு புறமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இவர்களுக்கிடையில் காங்கிரசும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜனதாள் எஸ் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவிடம், தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த தேவகவுடா, தனக்கு தற்போது 85 வயது ஆகிறது என்றும், 2019ம் ஆண்டு பாராளு மன்றத்துக்கு வீல் சேரில் போக விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.