ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநில ஆர்வலர் ஷீலா ரஷீத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
விதி எண் 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொலை தொடர்பு மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டு பிறகு சிறிது சிறிதாகச் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளன,. இந்த தேர்தல் முடிந்த பிறகு மாவட்ட மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் கட்டுப்பாட்டுக்களிக்கிடையே நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பல எதிர்க்கட்சிகளும் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவியும் காஷ்மீர் ஆர்வலருமான ஷீலா ரஷீத், “தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் என்பது தேர்தல் நடைமுறைக்கு எதிரானதாகும். உலகத்தின் நடுவில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதைக் காட்ட மத்திய அரசு இந்த தேர்தல் ஏற்பாட்டை நடத்தி உள்ளது.
மத்திய அரசு காஷ்மீர் குழந்தைகளைக் கடத்துவதைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஒரு அவசரத்துக்கு ஆம்புலன்சை அழைக்கவும் தொலை தொடர்பு வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகிறனர். இந்நிலையில் நடைபெறும் தேர்தல்கள் மூலம் நீதியும் கிடைக்காது, நல்லாட்சியும் நடைபெறாது. எனவே நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.
நான் தொடர்ந்து ஆர்வலராக இருந்து அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்ப நினைக்கிறேன். எனது கோரிக்கைகளை நான் தொடர்ந்து உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்து மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கப் போராடுவேன். மேலும் மாநிலம் துண்டாடப்பட்டதையும் மாற்ற எனது போராட்டத்தை நடத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.