சென்னை: இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சரும், எடப்பாடியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார். மேலும் ஒற்றை தலைமை குறித்து நான் பேசியது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை என்றும்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால், இபிஎஸ், ஓபிஎஸ் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இருவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் அதிமுக அலுவலகத்தில் இன்று தீர்மானக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இறுதி ஆலோசனை நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம், வைத்திலிங்கம், வளர்மதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் தீர்மானக்குழு பங்கேற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த ஜெயக்குமார் ஒபிஎஸ் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டதுடன், ஜெயக்குமார் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த ஜெயக்குமாரை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் வெளியே வரவிடாமல் கெரோ செய்தனர். பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பொதுக்குழு தீர்மானம் குறித்து 3-ம் கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது மேலும் தொடரும் என்றவர், செய்தியாளரகளின் ஒற்றை தலைமை குறித்த கேள்விக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கெரோ செய்தது குறித்தும் பதில் அளித்தார்.

அப்போது, ஒற்றை தலைமை குறித்து பேசியதில் என்ன தவறு?, ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த தவறும் இல்லை.  அதை தான் இப்போதும் கூறுவேன். தொண்டர்களின் மனநிலையின் பிரதிபலிப்புதான் மாவட்ட செய்யலாளர்களின் வேலை, அதுதான் ஒற்றை தலைமை. அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோரிக்கை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்றவர், ஒற்றை தலைமை குறித்து, ஒருங்கிணைப் பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் இடையே ஆலோசிக்கப்பட்டது. அதைத்தான் கூறினார்.

பொதுவெளியில் பேசி உடைப்பதற்கு ஒற்றை தலைமை விவகாரம் ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை. நான் ஊடகங்களில் சொன்னது என்ன சிதம்பர ரகசியமா? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என ஆவேசமாக கூறினார்.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அவர்களுக்கு 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.