டில்லி பற்றி எரியும் போது உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்தது : மன்னிப்பு கேட்க மறுக்கும் பிரசாந்த் பூஷன் கருத்து

Must read

டில்லி

டில்லி நகரம் கலவரத்தால் பற்றி எரியும் போது உச்சநீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்ததால் தாம் மன்னிப்பு கேட்க முடியாது என பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செயல்பாடு குறித்து தனது அதிருப்தியைத் தனது டிவிட்டரில் வெளிப்படுத்தி இருந்தார்.  இதையொட்டி இந்த பதிவுகள் நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தை அவமானம் செய்வதாகக் கூறி உச்சநீதிமன்றம் தானாகவே முன் வந்து அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.   இந்த வழக்கு விசாரணையின் போது பிரசாந்த் பூஷன் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என அறிவித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியது.   தமது கருத்துக்கள் நீதிமன்றத்தையோ நீதித்துறையையோ எவ்விதத்திலும் அவமதிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

பிரசாந்த் பூஷன் இது குறித்து அளித்த பிரமாணப்பத்திரத்தில், “டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டது.  இதில்  டில்லி நகரமே பற்றி எரிந்தது.  குறிப்பாக வடக்கு டில்லியில் அதிக அளவில் வன்முறை நிகழ்வுகள் நடந்தன.   ஆனால் அப்போது உச்சநீதிமன்றம் அதில் தலையிடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது.

இது எனக்கு வருத்தத்தை அளித்தது.  எனவே எனது கருத்தை நான் கூறினேன்.  மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்பவர்கள் வேறு, உச்சநீதிமன்றம் என்பது வேறு.  நான் மற்றொரு டிவீட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைக்கவசம் அணியாமல் சென்றது குறித்து பதிவிட்டிருந்தேன்.  இதில் ஏதும் தவறு இல்லை.  எனவே நான் எனது டிவிட்டர் பதிவுகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

இது கடும் பரபரப்பை உண்டாக்கியது.  இந்த வழக்கின் விசாரணை கடந்த புதன்கிழமை முடிவடைந்துள்ளது.  வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரை பிரசாந்த் பூஷனின் கருத்துக்கள் ஏற்படுத்திய பரபரப்பு  தொடர்ந்து வருகிறது.

More articles

Latest article