சென்னை: கட்சியின் இளம் தலைவர், மூத்த தலைவர் என அனைவரையும் அரவணைத்து செல்வேன்; தமிழ்நாட்டில் பாஜக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். அவர் இன்று கோவையில் இருந்து ஊர்வலமாக சென்னை அழைத்து வரப்படுகிறார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்து வந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்ற நிலையில், மாநில தலைவராக அண்ணாமலையை பாஜக தேசிய தலைமை நியமித்து உள்ளது. புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, முறைப்படி இன்னும் பதவியேற்கவில்லை. வருகிற 16ஆம் தேதி பதவியேற்கிறார். இதையடுத்து, அவர் பதவி ஏற்பு நிகழ்வை விமரிசையாக கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டு உள்ளனர்.
பொதுவாக புதிய தலைவர் அறிவிக்கப்பட்டவர்கள் அவர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்து,கையெழுத்திட்டு, பதவி ஏற்பது நடைமுறை. ஆனால்,அண்ணாமலை பதவி ஏற்பை வித்தியாசமாக நடத்த பாஜகவினர் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி, அண்ணாமலையை, கோவையில் இருந்து ஊர்வலமாக சென்னைக்கு அழைத்து வருகின்றனர். வரும் வழியில், மாவட்ட வாரியாக அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்க தமிழ்நாடு பாஜகவில் திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று கோவையில் அண்ணாமலை புறப்பட்டார். முன்னதாக அங்குள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், கட்சி தலைமைக்கு வயது முக்கியமில்லை என்று கூறியதுடன், கூட்டு முயற்சியால் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளரும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்றும் கூறினார்.
வரும் 16-ம் தேதி பிற்பகல் சென்னையில் பொறுப்பேற்க இருக்கின்றேன். சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க உள்ளேன். கரோனா காலமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணமாகிறோம். பாஜக வளர்ச்சிக்காகச் சிறப்பாகச் செயல்படுவேன். அனுபவமும், இளமையும் சேர்ந்த கூட்டு முயற்சியால், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளரும். பாஜகவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர், தேசிய அளவில் பொறுப்பில் இருக்கின்றனர். ஒருபுறம் இளமையானவர்கள் கட்சியில் இருக்கின்றனர். மற்ற கட்சிகளில் ஒரு தலைவர், ஒரு குடும்பம் என இருப்பார்கள். ஆனால், பாஜக தனி மனிதக் கட்சி கிடையாது. இங்கு வயது முக்கியமில்லை என்றார்.
பல்வேறு மாவட்டங்களாக வழியாக 16ந்தேதி சென்னை வரும் அண்ணாமலைக்கு சென்னை மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுக்க பாஜக தயாராகி வருகிறது. மேலும், சென்னை கமலாலயம் வரும் அண்ணாமலை, கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தலைமையில் பொறுப்பேற்கிறார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் தலைவர் இருக்கையில்,அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் பலர், அண்ணாமலையை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைக்கவிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.