கடலுார் : திமுகவில் தான் தொடர்ந்து செயல்படுவேன் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் தெரிவித்துள்ளார். ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், ஐயப்பன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை காரணமாக, தி.மு.க.வில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார் கடலுார் திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன். கடலுார் மாநகராட்சி மேயராக தன் ஆதரவாளரை கொண்டு வருவதற்காக கவுன்சிலர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்ததாக ஐயப்பன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதை அரசியலாக்கி, அமைச்சர் பன்னீர்செல்வம் முறியடித்து, தனது ஆதராளரை மேயராக தேர்வு செய்ய வைத்தார். இதையடுத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறிய அய்யப்பன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
இவருக்கும், கடலுார் கிழக்கு மாவட்ட செயலரும் வேளாண் துறை அமைச்சருமான பன்னீர்செல்வத்திற்கும் இடையே உள்ள முட்டல் மோதல் காரணமாக, இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதக ஐயப்பன் ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். ஐயப்பனை மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கையை தி.மு.க. மேலிடம் எடுக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த ஐயப்பன், தன் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவில் சேருவது குறித்துவிவாதித்தாக கூறப்படுகிறது. அதுபோல பாஜக தரப்பில் இருந்து அவர்களுக்கு வலைவீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையறிந்த தி.மு.க. தலைமை ஐயப்பனிடம் மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்துவிட்டு கட்சி பணியை தொடர அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஐயப்பன், நான் வேறு கட்சிக்கு செல்வதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும், திமுகவில்தான் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.