சென்னை: அதிமுக உடனான உறவை பாஜக முறித்துக்கொள்ள வேண்டும் என பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் பாரதியஜனதா கட்சிக்கு பொதுமக்களிடைய வரவேற்பு இல்லாத நிலையில், கட்சியை வலுப்படுத்த மாநில பாஜக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வரும் பாஜக, அதற்கான மாற்றுக்கட்சியின் பிரபலங்களை, தனது கட்சிக்கு இழுத்து வருகிறது. மேலும், ரஜினியையும் தனது கட்சியில் இணைத்துக்கொள்ளவோ அல்லது ஆதரவு தெரிவிக்கும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில், ரஜினியின் நணப்ரும், பாஜக ஆதரவாளரான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும், ரஜினியை அரசியலுக்கு கொண்டு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “தமக்கு முதல்வராகும் ஆசை இல்லை’ என்று தெரிவித்திருந்தார். அதுகுறித்து கூறிய குருமூர்த்தி, “ரஜினி தமது முடிவை மறு சிந்தனை செய்து, அவர் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது” என்று தெரிவித்திருந்தார். கடந்த மாதம் ரஜினியை குருமூர்த்தி சந்தித்தும் பேசினார். இதன் காரணமாக, ரஜினியை பாஜகவில் இணைத்துக்கொண்டு, பாமக, புதிய தமிழகம் உள்பட சில கட்சிகளுடன் தனித்து களமிறங்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த குருமூர்த்தி, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், பாஜக தனியாக போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
மேலும், தனியாக போட்டியிடுவதன் மூலம் 10% வாக்குகளைப் பெற முடியுமா என்பதை பாஜக சவாலாக எடுத்துக்கொண்டு, சோதித்து பார்க்க வேண்டும் என்று கூறியவர், டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக உடனான கூட்டணியை பாஜக முறித்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து, இதைத்தான் நான் பாஜகவின் கேட்பேன் என்று தெரிவித்து உள்ளார்.