சென்னை: எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என ரஜினி தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ரஜினிகாந்த் இன்று திடீரென தனது மக்கள் மன்ற மாவட்டச் சயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, புதிய கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் நடிகர் ரஜினி கருத்துகளை கேட்டறிந்தார். மேலும், மாவட்டச் செயலாளர்களை ரஜினி தனித்தனியாகவும் அழைத்து பேசினார்.
அப்போது பேசிய ரஜினி, என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் நடிகர் ரஜினி, மன்ற நிர்வாகிகளிடம் ஆவேசம் காட்டியதாகவும், ”தனித்து போட்டியிடுவது சாத்தியமா?” என கேள்வி எழுப்பியதுடன், பேருக்கு கட்சி தொடங்கி, 10-15 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வி அடைய விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும், தேர்தல் களத்தில் நின்றால் வெற்றிபெற வேண்டும், ஆனால், தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், தனித்து போட்டியிடுவது சாத்தியமோ என்பதுகுறித்து விவாதித்தாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கலாம் என மக்கள் மன்றத்தினர் பதில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த நிலையில், போயஸ்கார்டன் திரும்பிய ரஜினி செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, இன்று மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், அவர்களது கருத்துகளை முன்வைத்தனர். நானும் எனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன். அப்போது, நீங்கள் எந்த முடிவு செய்தாலும் அதை நாங்கள் ஆதரிக்க தயார் என நிர்வாகிகள் உறுதியளியத்துள்ளனர். எனவே, நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று கூறினார்.