ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் குஷ்பு: பிரதமர் மோடிக்கு புகழாரம்

Must read

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, இன்று மதியம் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், பாரதியஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,  நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி  எடுத்துச் செல்கிறார் என புகழாரம் சூட்டினார்.
பெண்ணியவாதியான குஷ்பு திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்தபோது, பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.  காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு,  காங்கிரஸ் கட்சியில் தனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்ததுடன் , காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதினார். அதில்,  காங்கிரஸின் உயர் பதவியில் இருந்தவர்கள் தன்னை அடக்கி ஒடுக்கியதால் தான் கட்சியை விட்டு விலகுவதாகவும் பணம், புகழுக்கு ஆசைப்பட்டு காங்கிரஸில் இணையவில்லை என்றும்  அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, இன்று மதியம் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சி.டி ரவி
உள்பட சில கட்சி நிர்வாகிளும் இடம்பெற்றிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் எனது கடமையை முழுமையாக செய்வேன் என்றும் கூறினார். மேலும், மோடி இந்தியாவை சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார் என்றும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளதாக கூறியவர், பாஜகவிடம் எனது எதிர்பார்ப்பு என்னவென்றால், கட்சி எனக்கு என்ன செய்யப் போகிறது என்பது பற்றியது அல்ல, ஆனால் நாட்டின் பிபிஎல் நிறுவனத்திற்கு என்ன கட்சி செய்யப்போகிறது என்பது பற்றியது அல்ல.  நாட்டின் 128 கோடி மக்களும் அவர் ஒருவரை நம்புகிறார்கள்,  அவர்தான்,  எங்கள் பிரதமர், அவர்கள் முற்றிலும் சரியானதைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்று புகழாரம் சூட்டினார்.
பாஜகவில் இணைவது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியவர், எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளுங்கட்சியை விமர்சிப்பது இயல்பு கட்சியில் இருக்கும் வரை அவர்களுக்கு சாதகமாக பேசுவது கடமை என்று வியாக்கியானம் பேசினார்.
குஷ்புக்கு  பாஜக தலைமை என்ன பதவித்தரப்போகிறது என்பது விரைவில் தெரிய வரும்.

More articles

Latest article