சென்னை: தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களை பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள் என தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மோடி அரசை கடுமையாக சாடினார். இரண்டு வகையான இந்தியா உள்ளது. ஒன்று, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பது. அதாவது, பேச்சுவார்த்தை நடத்துவது, உரையாடுவது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சகோதரனிடம் சென்று உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறேன். அவர் தனக்கு இதுதான் வேண்டும் என்கிறார். அவர் எனக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேட்கிறார். நான் எனக்கு இது வேண்டும் என்கிறேன். நீட் தேர்வில் விலக்கு வேண்டும் எனத் தமிழகம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அதனை மத்திய அரசு அதை நிராகரித்துக் கொண்டே இருக்கிறது.எனினும்,தமிழகம் மனம் தளராமல் மீண்டும் நீட் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறது.
மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் இது ஒரு கூட்டாட்சி. இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது. உங்களால் எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்யவே முடியாது. நீங்கள் ஒன்றும் மன்னர் இல்லை.
பெகாசஸ் என்பது மக்களை தாக்குகிறது. பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று பெகாசஸை அங்கீகரிக்கும்போது அவர் தமிழ்நாட்டு மக்களையும், அசாம் மக்களையும் தாக்குகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
ராகுல்காந்தியின் பேச்சு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் தமிழக அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,
அன்புள்ள ராகுல்ஜி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்து, நாடாளுமன்றத்தில் உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களை பாராளு மன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்.
இவ்வாறு கூறி உள்ளார்.