வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, புதுச்சேரி உள்பட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி
உடன் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.