டெல்லி: குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக  வருமான வரித்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

குஜராத்தை  சேர்ந்த முன்னணி தொழில் குழுமம்  நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆபரணங்கள் தயாரிப்பு, ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல துறைகளில் கால்பதித்து வணிகம் செய்து வருகிறது.  இந்த நிறுவனம் முறையாக வரி செலுத்தாமல் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை சந்தேகித்தது.

இதையடுத்து, அந்த தொழில்நிறுவனத்துக்கு சொந்தமான குஜராத்தின் கெடா, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 38 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டது. இதில், கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, சோதனைகளின்போது, கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் தரவுகள், அங்கு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கு ஆதாரங்களாக சிக்கி உள்ளன என்றும், கணக்கில் வராத ரொக்கம் ரூ.24 கோடி ரொக்கம், ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள், தங்க கட்டிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.