சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்; 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதன்படி, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. முதற்கட்டமாக 15மாவட்ட அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரிசுத்தமான முறையில் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதுடன், அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
சென்னையில் இன்று பள்ளி மாணவர்கள் மத்தியில் பேறிய முதல்வர் மு.க ஸ்டாலின், காலை உணவை தவிர்க்க வேண்டாம். நன்றாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக இருந்தால் தன்னம்பிக்கையோடு படிக்கலாம் என்றும் தெரிவித்தார். காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்து போட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் முதற்கட்டமாக செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி நாட்களில் தினசரி ஏதாவது ஒரு உணவு வழங்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானியங்கள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு உணவின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 1,545 அரசுப் பள்ளிகளில் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.