
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவர் பிறந்த சமயத்தில், அவரை தனது கைகளில் ஏந்திய செவிலியர் ஒருவர் வசித்து வருகிறார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது 72 வயதாகும் ராஜம்மா வவாதில் என்ற பெயரைக் கொண்ட அந்த செவிலியர், நர்சிங் துறையில் தனது படிப்பை நிறைவு செய்தவுடன் டெல்லி மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். அகமதாபாத்தில் பணியாற்றி கடந்த 1987ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர், தனது சொந்த மாநிலமான கேரளா திரும்பினார் அந்த செவிலியர்.
அவர் சொல்வதை நாம் அவரின் சொற்களிலேயே கேட்கலாமே இப்போது.
“அது 1970ம் ஆண்டு ஜுன் மாதம் 19ம் தேதி என நினைக்கிறேன். என்னுடைய வயது அப்போது 23. சோனியா காந்தியின் பிரசவ சிகிச்சைக் குழுவில் நானும் ஒரு செவிலியராக இடம் பெற்றிருந்தேன். பிரதமர் இந்திரா காந்திக்குப் பேரக் குழந்தை பிறந்தவுடன், அக்குழந்தையைக் காண்பதில், எங்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய ஆர்வம் ஏற்பட்டது.
ஆசையாக, செவிலியர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறி பிரதமரின் பேரக்குழந்தையை கையில் சுமந்தோம். பிரதமரின் குடும்பம் என்ற போதிலும், மருத்துவமனையில் பெரிய கெடுபிடிகள் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் மருத்துவமனை விதிமுறைகளை மதித்தே நடந்துகொண்டனர். சோனியா காந்தி ஒரு பிரபலமான நபர் என்றபோதிலும், மருத்துவமனையில் எங்களால் எந்த அசெளகரியத்தையும் உணர முடியவில்லை.
சோனியா காந்திக்கு சுகப் பிரசவமே நடந்தது. ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இருவருக்கும் பிரசவ அறைக்குள் வருவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தும், அவர்கள் வெளியிலேயே காத்திருக்க முடிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் வெள்ளைநிற குர்தா அணிந்திருந்தனர்.

குழந்தைப் பிறந்து 3 நாட்கள் ஆன பிறகுதான், பீகார் மாநிலத்திற்கு சென்றிருந்த இந்திரா காந்தி தன் பேரக் குழந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். அவரும் தனது அதிகாரத்தின் மூலம் மருத்துவமனையின் விதிமுறைகளை மீற நினைக்கவில்லை. அனைவரையும் போலவே நடந்துகொண்டார். குழந்தையை தேவையின்றி தொடுவதற்குக்கூட அவர் முயற்சிக்கவில்லை.
ராகுல் காந்தியை, அவரின் பெற்றோர்கள் பார்ப்பதற்கு முன்னதாகவே பார்த்தவர்கள் நாங்கள்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. இத்தனையாண்டுகள் கழித்து, எனது தொகுதியிலேயே அந்தக் குழந்தை போட்டியிட வந்துள்ளது என்பதை யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது.
ராகுல் காந்தி முதல் தடவை பிரச்சாரத்திற்கு வந்தபோது, அவரை சந்திக்க இயவில்லை. எனவே, இரண்டாம் முறை வரும்போது கட்டாயம் சந்தித்துவிட வேண்டும். அவரிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.
அவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு என்னிடம் நிறைய கதைகள் உள்ளன. அந்தக் கதைகளை, அவரின் தயார் மற்றும் பாட்டியும்கூட நிச்சயம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. நீங்கள் எப்படிப் பிறந்தீர்கள்? நீங்கள் கண்களைத் திறந்தவுடன் உங்களை முதன்முதலில் பார்த்தது யார்? உங்களை நாங்கள் எப்படி கவனித்துக் கொண்டோம்? பிரதமரின் பேரன் என்பதால், உங்களை நாங்கள் எப்படி அழைத்தோம்? என்பதான நிறைய கதைகள் உள்ளன.
நிச்சயமாக நான் ராகுலுக்குத்தான் வாக்களிப்பேன். என் பேரனுக்கு நான் வாக்களிக்கவில்லை எனில், வேறு யார் வாக்களிப்பார்கள்? இந்த வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி கட்டாயம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. வயநாடு தொகுதியை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் பேச வேண்டியுள்ளது.
அதேசமயம், முதன்முறையாக அவரை சந்திக்கும்போது, தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக எதையும் பேசமாட்டேன். இரண்டாம் முறை சந்திக்கும்போதுதான் அதைப்பற்றி பேச வேண்டியுள்ளது” என்றார்.
இவரின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று நாமும் நம்புவோம்..!
– மதுரை மாயாண்டி