சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடைபெற்ற போலி கவுரவ டாக்கடர் பட்டமளிப்பு விழா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னிடம்    50 டாலர்களை பெற்றுக்கொண்டு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கியது என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பேசி இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தான், துணைவேந்தராக இருக்கும்,  பல்கலைக்கழக்ததிலேயே ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், அதுகுறித்து முன்னமேயே முறையாக விசாரித்து இருந்தால், இதுபோன்ற ஒரு போலி பட்டமளிப்பு விழா நடைபெற்றிருக்காது. அதை தடுக்க தவறிய துணைவேந்தர் வேல்ராஜ்,  தானும் அமெரிக்க நிறுவனத்திடம் பணம் கொடுத்து போலி விருது பெற்றேன் என்று கூறியிருப்பது, அவரது கையாலாகாதனத்தை அம்பலப்படுத்தி உள்ளது.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் தொழில் நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இணைந்து நடத்தும் 2 நாள் பயிலரங்கம்  இன்று தொடங்கியது. இந்த பயிலரங்கத்தை தொடங்கி வைத்த துணைவேந்தர் வேல்ராஜ்,  தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது,  இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது தாய் மொழியில் கல்வி கற்காமல் இருப்பது தான் எனவும், தாய் மொழியில் கல்வி கற்றால்தான் புதிய சிந்தனைகள் தோன்றும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னிடம் 50 டாலர்களை பெற்றுக்கொண்டு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கியதாகவும், பணம் பெற்று விருது வழங்கும் மோசடி வெளிநாடுகளில் இருந்து இங்கும் வந்துவிட்டதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் வேல்ராஜின் பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.