கோவை: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் நேற்றிரவே உங்கள் வங்கிக் கணக்குளில் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டேன் என்றும், இந்தியாவுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும்,  தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரூ.1000 உதவித் தொகை வழங்கினார்.  இந்த திட்டத்தின்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் உள்ள 3.28 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைய உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,  தொடக்க விழாவுக்கு வரும் முன்பே மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்க நேற்றே உத்தரவிட்டேன் என்று கூறினார். மேலும், வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை தொடங்கி வைக்க கோவைக்கு வந்துள்ளேன் என்று கூறியவர்,  கோவை மக்கள் அன்பான, பாசமான மக்கள்; தொழிற்துறையில் சிறந்த மண்டலம் கோவை என்றவர், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இருக்கும் மண்டலம்; பழமையும், புதுமையும் கலந்த பகுதி கோவை. கோவை பகுதி மக்கள் விருந்தோம்பல் உள்ளிட்ட நற்பண்புகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசியவர்,  திமுக அரசு  நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டிசெயல்படுத்தி வருகிறது. நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க நான் தேர்ந்தெடுத்த இடம் கோவை மண்டலலம்

உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றவர்,  இந்தியாவில் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம் என்று கூறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ள திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடுதான் நமது நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது என்றார்.

மேலும்,  பெண்களுக்கு பேருந்தில் கட்டணமில்லாமல் செல்லும் வசதியை உருவாக்கி கொடுத்துள்ளோம். மகளிருக்கு விடியல் தரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திராவிட மாடல் அரசு என்றாலே அது சமூக நீதிக்கான அரசு தான். 28 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெறுவதை உறுதிசெய்துள்ளோம்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெறுவதை உறுதிசெய்துள்ளோம். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உருவாக்கப்பட்ட திட்டம்தான் தமிழ்ப் புதல்வன் திட்டம்.

ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கத்தோடு தமிழ்ப் புதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை முடிக்கும் ஒரு மாணவர் கூட உயர்கல்வி படிக்காமல் திசைமாறி சென்றுவிடக் கூடாது. தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். தடங்கலை உடைத்து எறிந்து மாணவர்கள் முன்னேற திராவிட மாடல் அரசு துணை நிற்கும். அனைவரும் பாராட்டக்கூடிய அளவுக்கு வினேஷ் போகத் வெற்றிபெற்றுள்ளார். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மன உறுதியை சுட்டிக்காட்டி பேசினார். வெற்றி ஒன்றே மாணவர்களுக்கு குறியாக இருக்க வேண்டும், மாணவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது

கலை கல்லூரிகள், 4 ஆண்டு பொறியியல், 5 ஆண்டு மருத்துவ படிப்பு, 3 ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தில் பயனடையும் மாணவர்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் கவனமாக கண்காணிப்பேன். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயனடையும் மாணவர்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் கவனமாக கண்காணிப்பேன்.

கோவை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதி கட்டடம், கருத்தரங்க கூடம் கட்டித்தரப்படும்.

இவ்வாறு கூறினார்.

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்