சென்னை: கட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்றும், அரசியலில் எதிர்நீச்சல் போடுவதை தான் விரும்புகிறேன் என நடிகர் விஜய்-ன் தநதை எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்து உள்ளார்.
அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளார். அதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்களையும் அறிவித்தார். ஆனால் அவரதுமகன் நடிகர் விஜய் , தனக்கும், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ;ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என விஜய் அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் எஸ்.ஏ.சி கட்சியின் தலைவர் என அறிவிக்கப்பட்ட பத்மநாபன் மற்றும் பொருளாளர் என அறிவிக்கப்பட்ட ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவருமே கட்சியிலிருந்து விலகி விட்டனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை வடபழனியில் இன்று நடைபெற்ற கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகரிடம், செய்தியாளர்கள், பத்மநாபன் விலகல் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்தவர், யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியை தொடர்ந்து நடத்துவேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது மிரட்டல் வரும் என்று தனக்கு தெரியும் என்றும் பதிலளித்தார். மேலும் நான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எப்போதுமே இருந்ததில்லை. எதிர்நீச்சல் போடுவதை தான் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.