சென்னை:  பிரதமர் பதவி குறித்து கூறிய ஸ்டாலின் எனது உயரம் எனக்கு தெரியும் என்று கூறியதுடன், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க  இன்று காலை டெல்லி புறப்பட்டார். அவரை  கட்சி தலைவர்கள் விமான நிலையத்தில் வழியனுப்பினர்.

18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் பாஜக வெற்றிக்கு இணையான வெற்றிகளை சுவைத்துள்ளது. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக எந்தவொரும் கட்சியும் 100க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றவில்லை. இதனால்,  239  தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள பாஜக, மீண்டும் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இண்டியாக கூட்டணி, என்டிஏ கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க முனைப்பு காட்டுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.  இதைத்தொடர்ந்து, இன்று டெல்லியில் இண்டியாக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஜுன் 1ந்தேதி அன்று டெல்லியில் இண்டியாக கூட்டணி சார்பில் பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இதில்  ஸ்டாலின் பங்கேற்காமல் டிஆர்பாலு பங்கேற்றார். இந்த நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.  இதற்காக அவர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,  தி.மு.க., கூட்டணி வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க, அரசியல் செயல்பாடுகளை தொடர்ந்து தி.மு.க., முன்னெடுக்கும். இந்த வெற்றியை, 50 ஆண்டு காலம் தி.மு.க.,வை கட்டிக்காத்த கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன்.

பிரதமர் பதவி குறித்து, ஏற்கனவே கருணாநிதி சொன்னது போல், என் உயரம் எனக்கு தெரியும். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பின், பிரதமர் கருத்து குறித்து பேசலாம். இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டில்லியில் இன்று கூடுகின்றனர். நானும் அக்கூட்டத்திற்கு செல்கிறேன். கருத்துக்கணிப்பு என்ற பெயரில், உளவியல் ரீதியான தாக்குதலை பா.ஜ., தொடுத்தது. அதை இண்டியா கூட்டணி தகர்த்தெறிந்துள்ளது.

பிரதமர் மோடியின் எதிர்ப்பு அலை, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது. தமிழகத்தில் முழு அளவில் எதிர்ப்பு இருக்கிறது என்பதற்கு, தேர்தல் வெற்றி ஒரு எடுத்துக்காட்டு. ஒடிசாவில் தமிழர்களை கேவலப்படுத்தி, பிரதமர் மோடி பேசினார். வெறுப்பு பிரசாரத்திற்கு எதிராக, மக்கள் ஓட்டு அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.