ராஞ்சி: மாட்டு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதால்தான், நானும் வேறுசில பாரதீய ஜனதா உறுப்பினர்களும் அவர்களின் வழக்குச் செலவுக்கு பணம் கொடுத்து உதவினோம் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா.
கடந்த 2017ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாட்டிறைச்சி தொடர்பாக, கால்நடை வியாபாரி அலிமுதீன் அன்சாரி என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சர ஜெயந்த் சின்ஹா மாலை அணிவிப்பதாய் வெளியான புகைப்படம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.
தற்போது இது தொடர்பாகத்தான் விளக்கம் அளித்துள்ளார் ஜெயந்த் சின்ஹா. அவர் கூறியுள்ளதாவது, “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் மற்றும் மிகவும் ஏழைகள் என்பதை அறிந்ததால்தான் அவர்களின் வழக்குச் செலவுக்கு பணம் கொடுத்தோம். காரணமின்றி அவர்கள் ஓராண்டாக சிறையில் வாடினார்கள்.
அதேசமயம், கொல்லப்பட்ட அலிமுதீன் மற்றும் அவருடைய விதவை மனைவி மரியம் தொடர்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அப்பாவிகளுக்கு உதவியதில் தவறில்லை.
எனவே, எனது வீடு தேடி வந்த அந்த அப்பாவிகள், நான் அவர்களுக்கு புதிய வாழ்வு கொடுத்ததாக கூறி, எனக்கு நன்றி தெரிவித்ததோடு, நான் அவர்களுக்கு மாலை அணிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.
இதுதான் நடந்தது. ஆனால், இதை ஊடகங்கள் தங்களின் இஷ்டத்திற்கு திரித்துவிட்டதுதான் பிரச்சினைக்கு காரணமே. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு மட்டுமே” என்றார்.