தாய் நாட்டுக்காக ஒரு மகனை பலியிட்டேன்… மற்றொரு மகனையும் தாய் நாட்டுக்காக கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று புல்வாமாக பயங்கரவாத தாக்குதலில் உயிழிந்த வீரரின் தந்தை கூறி உள்ளார்.
காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட ஜெய்ஷ்இமுகமது என்ற பயங்கரவாத குழுவினரின் தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே சக்தி வாய்ந்த வெடிகுண்டு மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், சேதம் கடுமையாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் பாகம் எது? வீரர்களின் உடல் பாகம் என்று தெரியாத அளவுக்கு சிதறியுள்ளன. இந்த கொடூரமான குண்டு வெடிப்பில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இறந்த வீரர்களில் ரத்தன் தாக்கூர் என்ற வீரரும் ஒருவர். இவர் பீகார் மாநிலம் பகல்பூரை சேர்ந்தவர். ரத்தன் தாக்கூர் இறந்த செய்தி அறிந்த அவரது குடும்பத்தினர் பெரும் சோகம் அடைந்தனர்.
இந்த கோர சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரத்தன் தாக்கூரின் தந்தை, அன்னை இந்தியாவுக்காக எனது ஒரு மகனை பலியிட்டுள்ளேன்…. இருந்தாலும், தாய் நாட்டுக்காக எனது மற்றொரு மகனையும் அனுப்புவேன்…. அவன் தாய்நாட்டுக்காக போரிடுவான்… பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.