திருவனந்தபுரம்:
கேரளா முதல்வர் பினராய் விஜயனை நடிகர் கமல் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு முன் அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘அரசியலில் நுழைவது குறித்து கேரளா முதல்வரிடம் பேச உள்ளேன். அவரிடம் ஆலோசனைகளை பெறுவேன். எனது அறிவிப்புக்கு முன் மேலும் பல அரசியல் தலைவர்களை சந்திப்பேன்.
பினராய் விஜயன் நிர்வாகத்தின் முதலாமாண்டு விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளேன். இது எனக்கு அனுபவ பாடத்தை கற்றுக் கொடுக்கும். இங்கு நான் கற்றுக்கொண்டு செல்வேன். இதேபோல் பல இடங்களுக்கு சென்று நான் பாடம் கற்றுக் கொள்வேன்’’ என்றார்.
தமிழக சட்டமன்றம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி அணிவகுத்து செல்ல ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கமல் அறிவித்த சில நாட்களில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அவரது அரசியல் தொடர்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு பல நிறங்கள் உள்ளது. ஆனால், என்னுடைய நிறம் காவி கிடையாது. பினராய் விஜயன் மீதான எனது புகழ்ச்சி கண்மூடித்தனமானது கிடையாது. இது உணர்வு பூர்வமானது.
அவரது புள்ளி விபரங்களை பார்க்க வேண்டும். அவரிடம் உள்ள நிதியை பார்க்க வேண்டும். அதை வைத்து அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். அவர் இடது அல்லது வலது அல்லது மையம் என்பது ஒரு பொருட்டல்ல. இங்கே மேற்கத்திய தரத்தில் வாழ்பவர்களும் உள்ளனர்’’ என்றார்.
இதன் பின்னர் கமல் பினராய் விஜயனுடன் சந்தித்து பேசினார். திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். பினராயுடன் அரசியல் குறித்து பேசப்பட்டதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ‘கண்டிப்பாக’ என்று கமல் பதிலளித்தார்.
கமல் வருகை நட்பு ரீதியிலானது என்று முதல்வரின் அலுவலக தகவல்கள் தெரிவித்தன. மேலும், ‘‘ நட்பு ரீதியிலான பேச்சு நடத்துவதற்காகவே கமல் வந்தார். இது முழுமுழுக்க நட்பு அடிப்படையிலான சந்திப்பு தான்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
சமீப காலமாக அதிமுக அரசை கமல் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முன்னதாக கேரளா முதல்வர் நலத்திட்டங்களை பாராட்டி கமல் பல முறை கடிதம் எழுதியுள்ளார். இருவரும் பல முறை கடித தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.