வாஷிங்டன்
பங்குச் சந்தையை உச்சத்துக்குக் கொண்டுவந்ததாலும் சிறந்த வேலைவாய்ப்பை அளித்ததாலும் அமெரிக்க அதிபராகத் தொடர உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டனர். கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி ஜோ பைடன் மொத்தமுள்ள 538 இடங்களில் 270க்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் டிரம்ப் இதை இன்னும் ஒப்புக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.
அடுத்த வாரம் அதிகார பூர்வமாக ஜோ பைடனை அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட உள்ள நிலையில் டிரம்ப் இதுவரை தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் உள்ளார். மேலும் அவர் பைடனின் வெற்றியைக் கள்ள வாக்குகள் மூலம் நடந்த மோசடி எனக் கூறி ஒவ்வொரு நீதிமன்றமாக வழக்கு தொடர்ந்து வருகிறார். இவற்றில் சில வழக்குகளில் அவர் தோல்வி அடைந்த போதிலும் தேர்தல் மோசடி என்னும் தனது கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
நேற்று கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில் கலந்துக் கொண்ட டிரம்ப், “அடுத்த ஆட்சி நிச்சயமாக டிரம்பின் ஆட்சியின் தொடர்ச்சியாக இருக்கும். ஏற்கனவே நான் பங்குச்சந்தையை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். சிறந்த வேலைவாய்ப்பு அளித்துள்ளேன். ராணுவத்தை சீரமைத்துள்ளேன். எனவே நானே அதிபராக தொடர்ந்து மேலும் முன்னேற்றம் செய்வேன்.
நாம் அடுத்த நிர்வாகம் குறித்து சிந்திக்க வேண்டும். நாம் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நமக்குப் பல கடமைகள் உள்ளதால் அடுத்த நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் எனக் கவனிக்க வேண்டும். தற்போது கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் அளிக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் ஆயிரக்கணக்கில் வாக்களித்த டிரம்ப்பின் ஆட்சி நிச்சயம் மேலும் தொடரும். பல்லாயிரக்கணக்கான வாக்குகளை யாராலும் திருட முடியாது. எனவே தேர்தல் மோசடி மற்றும் ஒரு சில மாநில வெற்றிகளுடன் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. நீங்கள் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல் நிஜத்தையும் நடந்துள்ள மோசடியையும் பார்க்க வேண்டும்.
பாரக் ஒபாமா தனது இரண்டாவது தேர்தலில் 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றும் வெற்றி பெற்றார். ஆனால் நான் 1.2 கோடி வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளேன். எனவே அடுத்த நிர்வாகம் யாருடையது என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். தற்போது எனக்கு அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க வேண்டிய பணி உள்ளது. அதை அளிப்பதே எனது முதல் பணி ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.