பிரயாக்ராஜ்
இந்திரா காந்தியையும் அவர் பேத்தியையும் படகில் ஏற்றி சென்றதால் தாமும் ராமரைப் போன்றவரை ஏற்றிச் சென்றுள்ளதாக பிரியங்காவின் படகோட்டி கூறி உள்ளார்.
பிரயாக் ராஜ் நகரில் கங்கை நதியில் அசோக் சானி கேவாத் மற்றும் அவர் மகன் அபிஷேக் சானி கேவாத் படகு ஓட்டி வருகின்றனர். இவர்களின் படகில் நேற்று பிரியங்கா காந்தி தனது கங்கை யாத்திரையின் ஒரு பகுதியாக பயணம் செய்தார். அவரை நதிக்கரை அருகில் உள்ள கிராமங்களுக்கு தந்தையும் மகனும் அழைத்துச் சென்றனர். இதை ஒட்டி படகோட்டிகளான தந்தையும் மகனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அசோக் சானி, “நான் கடந்த 1977 ஆம் வருடம் அதாவது சுமார் 18 வயதாக இருந்த போது இந்திரா காந்தியை என் படகில் ஏற்றிச் சென்றேன். நாங்கள் மோடிக்கும் படகு செலுத்தி உள்ளோம். இப்போது எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் எனது அனுபவத்தை சொல்லி இருக்கிறேன். அவர்கள் தற்போது என்னை பிரியங்காவுடன் புகைப்படம் எடுத்த் வருமாறு கூறினார்கள். அதை ஆயுளுக்கும் சுவற்றில் மாட்டி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் சொன்னார்கள்.
வரும் மக்களவை தேர்தலில் யார் வெல்வார்கள் என என்னால் சொல்ல முடியாது. ஆனால் இந்த தேர்தலில் நான் பிரயங்காவுக்கு படகு ஓட்டியதை என்னால் மறக்க முடியாது. எங்களை பொறுத்தவரை இந்திரா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை படகில் ஏற்றிச் சென்ற போது ராமரை ஏற்றிச் செல்வது போலவே தோன்றியது” என கூறி உள்ளார்.