பெங்களூரு:
ட்விட்டரில் தன்னை இந்தியில் விமர்சித்த பா.ஜ., பொதுச் செயலருக்கு, ‘எனக்கு இந்தி தெரியாது’ என சித்தராமையா பதில் டுவிட் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில், மே, 12ல், சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி, அரசியல் அனல் உச்சத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைவர்களிடையே பரஸ்பர தாக்குதல் அதிகமாகி இருக்கிறது.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையா, மைசூரின், சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள, படாமி தொகுதியிலும், சித்தராமையா போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து, பா.ஜ., பொதுச் செயலரும், கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளருமான, முரளிதர் ராவ், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட முயற்சிக்கு பின், நீங்கள், சாமுண்டீஸ்வரி தொகுதியை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். அத்தொகுதியில் தோற்று விடுவோம் என்பதற்காக, தற்போது, இரண்டாவது தொகுதியை தேடி வருகிறீர்கள்’ என, இஹிந்தியில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு சித்தராமையா, ‘எனக்கு இந்தி தெரியாது; அதனால், உங்கள் தகவல்களை, ஆங்கிலம் அல்லது கன்னட மொழியில் பதிவிடுங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.