சென்னை:

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான திருநாவுக்கரசரை, யாரென்றே தெரியாது என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் கருத்து மோதல்கள் அதிகரித்து வருன்றன.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் – திருநாவுக்கரசர்

சமீபத்தில், இளங்கோவன், “திருநாவுக்கரசர் அ.தி.மு.க.வின் சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்று குற்றம்சாட்டியதோடு “விரைவில்  திருநாவுக்கரசர் அ.தி.மு.க.வில் இணைந்தவிடுவார்” என்றும் தெரிவித்தார். மேலும், “சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலாவின் ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களை வாக்களிக்க வைக்க முயல்கிறார் திருநாவுக்கரசர்” என்றும் குற்றம்சாட்டினார்.

தான் அப்படி  நடந்துகொள்ளவில்லை என்று விளக்கம் அளித்த திருநாவுக்கரசர், “ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்கப்போவதில்லை” என்றும் காட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி ஜெயலலிதா. இரண்டாவது குற்றவாளி சசிகலா. இவர்களது படங்களை அரசு அலுவலங்களில் வைப்பது சட்டப்படி தவறாகும். இது குறித்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

அடுத்ததாக, தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பற்றிய கேள்விக்கு, “திருநாவுக்கரசர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்று அதிரடியாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இந்நாள் தலைவர் திருநாவுக்கரசரை யாரென்றே தெரியாது என்று கூறியது செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையையும், சிரிப்பலையையும் ஒரே சேர ஏற்படுத்தியது.