சென்னை:
தமிழக சட்டப்பேரவை இன்று 3வது நாளாக எதிர்க்கட்சி இன்றி செயல்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், சட்டசபை வளாகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கு சாராய ஆலைகளே கிடையாது… இருந்தால்தானே மூடி முடியும் என்று கூறினார்.
சட்டசபையில் இன்றைய விவாதத்தின்போது, படிப்படியாகத்தான் மதுக்கடைகளை குறைக்க முடியும் என்று கூறிய அமைச்சர் தங்கமணி, நீதிமன்ற உத்தரவின்பேரில் கடைகள் மூடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது 3 ஆயிரத்து 866 கடைகள் உள்ளன என்றும், தமிழகத்தில் மதுபான உற்பத்தியில் 25 சதவீதம் யாருடைய குடும்பத்தை சார்ந்தது என கேள்வி எழுப்பிய அமைச்சர் தங்கமணி, ஜெயலலிதா வழியில் உள்ளவர்கள் என்றால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற உடன் சாரய ஆலைகளை முட வேண்டியது தானே என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளிக்க முயன்ற டிடிவிக்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததை கண்டித்து, அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அதையடுத்து , சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,சபையில் நான் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தாக கூறினார்.
அமைச்சர் தங்கமணி, சட்டசபையில், அரசியல் மேடைபோல பேசுகிறார் என்று குற்றம் சாட்டிய டிடிவி, ஆணவத்தில், கோபத்தில் அமைச்சர்கள் பொய் பேசினால், பதில் சொல்ல சட்டமன்றத்தில் வாய்ப்பளிக்கப்படு வதில்லை. அதன் காரணமாக வெளியே வந்து பேசுகிறோம் என்று கூறினார்.
ஜெயலலிதா வழியில் மதுக்கடைகளைக் குறைப்போம் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லும் அரசாங்கம். மீண்டும் 810 கடைகள் திறக்கப்போகிறோம் என்று கூறுகிறது. மூடிய மதுக்கடைகளை அரசு மீண்டும் திறக்க முயற்சி செய்கிறது. இது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
என் குடும்பத்தில் யாருக்கு சாராய ஆலை உள்ளது என்பது பற்றி எனக்குத் தெரியாது, எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது என்று மறுப்பு தெரிவித்ர். நான், மனைவி என் குழந்தை மட்டும்தான் இருக்கிறோம் என்றும் கூறினார்.