பெங்களூரு:
கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என தான் பேசவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக மாநிலத்தை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என்று பேசியதாக தகவல் வெளியானது.
இதையடுத்துபிரகாஷ்ராஜூக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. வலைதளங்களில் அவகரை பலரும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். மீம்ஸ்களும் வெளியாகின.
இந்த நிலையில், பிரகாஷ்ராஜ் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ தகுதி வாய்ந்த நபர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக எனது நிலைப்பாடாகும். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றே பெங்களூரு நிகழ்ச்சியில் பேசினேன். தன்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து எனக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். இதன் மூலம் எனக்கு பயத்தையும் விரக்தியையும் ஏற்படுத்த முயல்கிறார்கள்” என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.