பெங்களூரு
தாம் விரும்பிய கல்லூரி வேலை ஆகிய எதுவும் தமக்கு முதல் முறை கிடைக்கவில்லை என ஐஎஸ்ஆர்ஓ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சுருக்கமாக ஐ எஸ் ஆர் ஓ என அழைக்கபடுகிறது. இதன் தலைவராக பணி புரியும் சிவன் சமீபத்தில் பெங்களூருவில் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக் கொண்டார். இந்த கலந்துரையாடலில் அவரிடம் ராக்கெட், செயற்கைக் கோள், சந்திராயன் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து மாணவர்கள் கேள்விகள் எழுப்பினார்கள்.
அவர்கள் கேள்விக்ளுக்கு பொறுமையாக சிவன் பதில் அளித்தார். அத்துடன் தமது இளமை வாழ்க்கையைப் பற்றியும் அவர் மாணவர்களிடம் பேசினார். சிவன், “நான் எனது பள்ளிப் படிப்பை முடித்ததும் பொறியாளர் ஆக விரும்பினேன். ஆனால் எனக்கு அப்போது பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காததால் பி எஸ்சியில் சேர்ந்தேன். அதை முடித்த பிறகு எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது.
அதைப் போலவே நான் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணி புரிய விரும்பினேன் அது கிடைக்கவில்லை. அதன் பிறகு நான் விக்ரம் சாராபாய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்தேன். அதன் பிறகு மீண்டும் முயற்சித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணியில் சேர்ந்தேன்.
எனவே தோல்விகளை கண்டு கவலை கொள்ளாமல் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட வேண்டும். பல விஞ்ஞானிகள் தவறுகளில் இருந்து பலவற்றை கற்றுக் கொள்கிறார்கள். எதுவுமே முதல் முறையே வெற்றி அடையும் என எதிர்பார்ப்பது தவறாகும்.” என மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.