சிர்பூர்

தாம் சீருடையில் இருக்கும் போதே தம்மை சட்டப்பேரவை உறுப்பினர் சகோதரர் தாக்கியது குறித்து வனத்துறை அதிகாரி அனிதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சிர்பூரில் வனத்துறை சார்பில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் வனத்துரை அதிகாரி அனிதா தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் கோனேரு கோனப்பாவின் சகோதரர் கிருஷ்ணா தனது டி ஆர் எஸ் கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து தாக்குதல் நடத்தினார்.    பயந்து போன அனிதா அருகில் இருந்த டிராக்டரில் ஏறிக் கொண்டார்.   ஆயினும் விடாமல் துரத்திய கிருஷ்ணா அவரை தடியால் தாக்கி காயம் ஏற்படுத்தினார்.

இந்த சம்பவத்தை ஒட்டி கிருஷ்ணா மற்றும் டி ஆர் எஸ் கட்சியை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் மீது அரசு அதிகாரியை பணி புரிய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்துதல்,  பணியின் போது தாக்குதல் நடத்துதல், கலவரம், ஆயுத தாக்குதல், குற்றவியல் செயல்கள், பெண்ணை கொடுமை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.    கிருஷ்ணாவின் இந்த கொடூர செயலுக்கு டிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்சிலையில் தாக்கப்பட்ட வனத்துறை அதிகாரி அனிதா, “நான் படிப்பறிவு அற்ற பெற்றோருக்கு பிறந்த ஒரு கிராமத்து பெண்.  நான் அரசு கல்லூரிகளில் பயின்றவள்.  சமூகத்துக்கு பணி ஆற்ற நான் இந்த துறையில் பணியில் இணைந்தேன்.   நான் சீருடை அணிந்திருக்கும் போது என்னை பெண் எனவும் பாராமல் தாக்கியதை நான் சிறிதும் எதிர்பாராததால் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.  இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.