மும்பை: தன் மகன் பிறந்த காரணத்திற்காக, தான் வெளிநாட்டு தொடரின்போது விடுப்பு கேட்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
ஆஸ்திரேலியாவில் தற்போதைய நிலையில், தோல்வி கேப்டனாக இருக்கும் விராத் கோலி, தனது மனைவியின் மகப்பேறுக்காக, முதல் டெஸ்ட் போட்டியுடன் விடுப்பு எடுத்து நாடு திரும்புவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கோலியை விமர்சிக்கும் வகையில், கடந்த 1975-76ம் ஆண்டில், மேற்கிந்திய தீவுகள் & நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின்போது, கவாஸ்கர், தனக்கு மகன் பிறந்ததை காரணம் காட்டி, இடையிலேயே நாடு திரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், கவாஸ்கர் நாடு திரும்ப விரும்பினார் என்றும், அதேசமயம் அவருக்கு விடுப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு தற்போது கவாஸ்கரே நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன். நான், குழந்தை பிறக்கும்போது மனைவியுடன் இருக்க வேண்டும் என்று விடுமுறை கேட்கவே இல்லை. சுற்றுப் பயணத்துக்குக் கிளம்பும்போதே, நான் அருகில் இல்லாத நேரத்தில்தான் குழந்தை பிறக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியும்.
நான் இந்திய நாட்டுக்காக விளையாடப் போனேன். அதனால் என் மனைவி எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது எனக்குக் காயம் ஏற்பட்டது.
மருத்துவர்கள் என்னை 4 வாரங்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அடுத்த டெஸ்ட் மேட்ச் மேற்கிந்தியத் தீவுகளில் 3 வாரங்களுக்குப் பிறகுதான் இருந்தது. எப்படியும் இந்தக் காலகட்டத்தில் நான் விளையாட முடியாது என்பதால் இந்தச் சமயத்தில், எனது சொந்தச் செலவில் நான் குழந்தையைப் பார்த்துவிட்டு மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிக்கு முன் திரும்பி விடுவதாக அனுமதி கோரினேன்.
எனவே, நான் விளையாடாமல் போக காயம் மட்டுமே காரணமாக இருந்தது. வேறெதுவும் இல்லை. ஏன், மருத்துவர்கள் என்னைக் கூடுதலாக ஒரு வாரம் ஓய்வெடுக்கச் சொன்னபோதும்கூட, நான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினேன்” என்றுள்ளார் அவர்.