சென்னை:
பெரியார் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை பெயர் மாற்றம் குறித்து பாஜக தலைவர் முருகன் அரசு ஆவணங்களில் பெயர் மாற்றப்படாமல் உள்ளது என்று கூறியதற்கு 50 ஆண்டுகாலமாக சாலை உள்ளது கண்ணுக்கு தெரியாதா? வேண்டுமானால் கண்ணாடி வாங்கித்தருகிறேன் போய் போர்டுகளை படிக்கச்சொல்லுங்கள் என்று ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக கூறினார்.

சென்னையில் உள்ள பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டு பலகை வைத்தது குறித்தும், அண்ணா சாலை, காமராஜர் சாலை, மாமல்லபுரம் சாலை பெயர் மாற்ற முடிவு உள்ளதை நிறுத்தக்கோரியும் திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் அளித்த கடிதத்தை திமுக மாநிலங்களவை எம்.பி,க்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்து அளித்தனர்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள், பாஜக தலைவர் முருகன் சாலைகளுக்கு பெயர் வைத்த விவகாரத்தில் அரசாணையில் இதுவரை பெயர் மாற்றப்படவில்லை என்று கூறியுள்ளாரே எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக பதிலளித்தார், அவரது பதில் வருமாறு:

“முருகன் நெடுஞ்சாலைத்துறை ஆவணத்தில் பெயர் மாற்றாமல் இருப்பதாகச் சொல்வது பொருத்தமற்றது. அவர் அந்தக்காலத்தில் பிறந்திருக்கவே மாட்டார். 52 ஆண்டுகாலம் அண்ணா சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது, 46 ஆண்டுகாலமாக காமராஜர் சாலையும், பெரியார் ஈவெரா சாலை 43 ஆண்டு காலமாகவும் அவ்வாறாக அழைக்கப்பட்டு வருகிறது.

இதெல்லாம் எல்.முருகனுக்கு தெரியாதா? வேண்டுமானால் கண்ணாடி ஒன்று வாங்கித்தருகிறேன் போய் போர்டுகளை பார்த்துவிட்டு வரச்சொல்லுங்கள். ஆவணத்தில் இருப்பது என்பதை தலைமைச் செயலரே ஒப்புக்கொண்டார் அப்புறம் இவர் என்ன சொல்வது” .

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.