சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மூத்த அதிமுக தலைவர்  குன்னம் ராமச்சந்திரனை  மாற்று கட்சியினர் தங்களது கட்சிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில்,   அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில் இருந்தும்  விலகுவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

குன்னம் ராமச்சந்திரனின் நெருங்கிய நண்பர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தவெகவுக்கு இழுக்க  முயற்சி செய்ததாக கூறப்பட்டது. மேலும் சிலர் எடப்பாடி அணிக்கு அழைத்ததாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில்,  அசிங்கமா இருக்கு.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கூறிய குன்னம் ராமச்சந்திரன்,   அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்து உள்ளார்.

பெரம்பலூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன். இவர் ஜெ.மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தார். ஆனால், ஓபிஎஸ் அதிமுகவினர் மத்தியில் செல்லாக்காசாவி விட்ட நிலையில், அவரிடம் இருந்தவர்கள் திமுக, தவெக, அதிமுக என மாற்று கட்சிகளை நோக்கி ஓடினர். இதனால் ஒபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், இன்று இன்று கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம்  பேசிய குன்னம் ராமச்சந்திரன்,  :“இரண்டு விஷயங்கள் என் மனதை வாட்டியது. என்னைப் பெற்றெடுத்த தாய் புரட்சித் தலைவி அம்மாவின் படத்தை வீட்டிலிருந்து, அலுவலகத்திலிருந்து அகற்றுவாயா என்று குடும்பத்தினர் கேட்டனர்.

எனக்கு அசிங்கமாக இருக்கிறது. ‘இது வெல்லாம் ஒரு வேலையா அப்பா?’ என்று என் மகள் கேட்டாள். இது மிகுந்த வேதனை தந்தது. இதை நினைத்தே, எனக்கு இரவு முழுவதும் உறங்க முடியவில்லை.  அதேனால்,  காலையில் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு தெளிவான முடிவை எடுத்துள்ளேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதாக எடுத்த முடிவுக்கு எனது குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் உடல் நலன் குறித்து மருத்துவர்களின் ஆலோசனை காரணமாக, நான் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுகிறேன்.

நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு பேசுவது தவறான விஷயம் என்ற போதிலும், உடல் நிலை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல் பேரில் நான் இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை. என்னுடன் இதுவரை பயணித்த கழகத் தொண்டர்களும் என்னை மன்னித்து, அவர் அவர் விரும்பும் கழகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு குன்னம் ராமச்சந்திரன் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார்.

இதில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த தஞ்சை ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கத்துடன் அவரது மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார்.

ஏற்கனவே மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவிலிருந்து விலகிய செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். விரைவில் குன்னம் ராமச்சந்திரன் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]