சென்னை: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித் காவல்துறையினரின் காட்டுமிராட்டித்தனமாக தாக்குதலால் உயிரிழந்த நிலையில், இந்த லாக்கப் டெத் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தனத எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவகங்கையில் 29 வயது இளைஞர் காவலில் இறந்த சம்பவத்துக்காக ‘நான் மிகவும் வருந்துகிறேன்’, இது ‘நியாயப்படுத்த முடியாத தவறு’ என்று கூறி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், அதிமுக பாஜக, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றகோரி வலியுறுத்தியது. மேலும், இந்த விசாரித்த நீதிமன்றம், பிரேத பரிசோதனை அறிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், தமிழ்நாடு காவல்துறையை கடுமையாக சாடியது. மேலும் தமிழ்நாடு அரசு முறையான பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது. இதற்கிடையே அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டதுடன் அவருடனும் விசாரணை நடத்தினர். இதன்முலம் காவல்துறையினரின் காட்டுமிராட்டிதனம் உறுதிப்படுத்தப்பட்டது.
அஜித் போலீசாரால் தாக்கப்படும் வீடியோ சமுக வலைதளங்களில் டிரெங்கான நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கை கேள்விக்குறியானது. நீதிமன்றமும் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இது மக்களிடையே பேசும்பொருளாக மாறியது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 29 வயது அஜித்குமாரின் காவலில் இறந்ததற்கு செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின், இது ஒரு “நியாயப்படுத்த முடியாத தவறு” என்றும், பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேசுவதைக் காணலாம். “நான் மிகவும் வருந்துகிறேன், நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன், தீவிர நடவடிக்கை. உறுதியாக இருங்கள்,” என்று பாதிக்கப்பட்ட வரின் தாயாரிடம், இரங்கல் மற்றும் ஆதரவை தெரிவித்தார்.
தனது அமைச்சரவை சகாவான கே.ஆர். பெரியகருப்பன் மூலம் தொடர்பு கொண்ட முதல்வர், அஜித்குமாரின் சகோதரரிடம் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். “ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒரு டி.எஸ்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் எஸ்.பி. கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். உரிய தண்டனையை நாங்கள் உறுதி செய்வோம்” என்று ஸ்டாலின் கூறினார்.
“திருப்புவனம் இளைஞர்களுக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. இது நியாயப்படுத்த முடியாத தவறு. கடமையில் இருந்து தவறியவர்களுக்கு தண்டனை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கும்” என்று ஸ்டாலின் தனது செய்தியில் எழுதினார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது, மேலும் காவல் மரண வழக்குகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.