சென்னை: நரேந்திர மோடியின் அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்து வைத்துள்ளதால், அடுத்த அரசில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்பவருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம்.

ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “நாட்டின் உற்பத்தி விகிதம் மோசமாக சரிந்துள்ளது. துறைசார்ந்த முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் குறைந்துவிட்டது. பொருளாதாரம் குறித்த அனைத்துவித தரவுகளும் நம்பிக்கையை சிதைப்பதாக உள்ளன.

அடுத்த நிதியமைச்சராக பொறுப்பேற்பவரின் நிலைமை உண்மையில் பரிதாபத்திற்கு உரியது. அவருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், எங்களுக்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், சத்தீஷ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், பாரதீய ஜனதாவுக்கு நேரும் ஒவ்வொரு சிறிய இழப்பும், காங்கிரசுக்கு இலாபமாக அமையும்.

தேர்தலுக்கு முந்தைய எங்களின் கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, அவர்கள் பாரதிய ஜனதா அல்லாத ஒரு அரசை அமைப்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். அவர்களிடம் எந்த சலனமும் கிடையாது.

இதுதவிர, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு மாநிலங்களின் இரண்டு கட்சிகள் ஆகியவை, பாரதீய ஜனதா ஆட்சியமைப்பதைத் தடுக்க, காங்கிரசுடன் அணி சேரும் அவசியத்தை உணர்வார்கள்.

பாரதீய ஜனதாவை வெளியேற்றுவதுதான் பிரதான நோக்கம் என்பதால், இந்த விஷயத்தில் விட்டுக்கொடுத்தல்களும் இருக்கும். அதற்காக, பெருமையை குறைத்துக் கொள்வது என்று சொல்வதெல்லாம் சரியான கருத்தல்ல.

நாட்டின் பொருளாதாரம் என்று வருகையில், அனைத்துமே கடந்த 5 ஆண்டுகளில் கீழ்நோக்கி சென்று கொண்டுள்ளது. அரசின் தரவுகள் அனைத்துமே போலியாக உள்ளன. வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகளாகட்டும், வளர்ச்சி தொடர்பான தரவுகளாகட்டும், தூய்மை இந்தியா தொடர்பான தரவுகளாகட்டும் மற்றும் உஜ்வாலா திட்டம் தொடர்பான தரவுகளாகட்டும் அனைத்துமே நம்பகத்தன்மையற்றதாக உள்ளன.

உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் ஒருவர் என் உடன் பணிசெய்யும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டார், “நாம் சீனா போன்ற நாடுகளின் குழுவில் இணைகிறோமா? என்று. அந்தளவிற்கு மத்திய அரசின் தரவுகளில் மோசடி உள்ளது.

இந்த மோசமான நிலையால், முதலீடுகள் பெரியளவில் சரிந்துவிட்டன. கடந்த 5 ஆண்டுகளில் தனியார் முதலீடுகள் எப்போதுமில்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளன” என்று கவலை தெரிவித்தார்.

– மதுரை மாயாண்டி