சென்னை: தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகஅரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் புதிய கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்பதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட நிலையில், இதையடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. பதவி ஏற்றதும், முதல்வர் கவர்னருக்கு புத்தகங்களை வழங்கி பரிசளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ரவி, வணக்கம் என கூறி செய்தியாளர் சந்திப்பில் பேசத் தொடங்கினார். உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி என்று கூறினார்.
தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்வேன் என்று கூறியவர், என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என்று கூறியதுடன், தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது. அரசியல் அமைப்பு கொடுத்துள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் எனது பணிகள் இருக்கும் என்றார்.
மேலும், தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு உள்ளது . தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தி யுள்ளது என்று பாராட்டு தெரிவித்தவர், மாவட்டந்தோறும் ஆய்வுப் பணிகளுக்கு செல்வது குறித்தெல்லாம் தற்போது எதுவும் கூற இயலாது. தமிழக அரசின் ஒட்டு மொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை என்றார்.
தான் மிக குறைந்த காலம் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது என்றும் கூறினார்.