சென்னை: தமிழ்நாட்டின் பிரசாந்த் கிஷோராக நான் இருப்பேன் என்று கூறிய காமெடி நடிகர் எஸ்வி. சேகர்,  பள்ளிக் கூடங்களில் என்னைக்கு சாதியை எடுக்கிறார்களோ அன்னைக்கு தான் சாதிய கொடுமைகளை தடுக்க முடியும் என்று டைமிங்காக பேசியதுடன்,  ஒருவருக்கு கூடும் ‘கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது; விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் ஆரூடம் கூறினார்.

சென்னையில்  பிராமணர்கள் சங்கம் சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என… அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து..” என்று கடுமையாக விமர்சனம் செய்ததுடன், நடிகர் எஸ்வி சேகரையும் இனத்துரோகி என தெரிவித்து இருந்தார்.

கஸ்தூரியின் பேச்சு வைரலான நிலையில், அதற்கு பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து  ஆட்சி செய்து வரும் திராவிட அரசியல் கட்சியின்  பின்புலத்தில்,  நாயுடு அமைப்புகள் காவல்துறையில்  பல இடங்களில் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.  அதன்பேரிர் நடிகை கஸ்தூரி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை விரைவில் கைது செய்யும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகர் எஸ்.வி. சேகர் நடிகை கஸ்தூரி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். “பொது வெளியில் நாம் பேசும் போது, என்ன பேசுகிறோம் என்பதை விட எந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு போக வேண்டும். மைக்கை பார்த்ததும், வியாதிக்காரன் வாந்தி எடுத்த மாதிரி எல்லாவற்றையும் பேசினால் தப்பு வரத்தான் செய்யும். கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.  பிரமாணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே தப்பு,” என்று தெரிவித்தார்.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு  2026 ல் பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றவர்,  எந்த கட்சி பிராமணர்களுக்கு நலவாரியம் , இட ஒதுக்கீடு என அறிவிப்புகளை அறிவிக்கிறார்களோ அவர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இனி தமிழ்நாட்டின் பிரசாந்த் கிஷோராக நான் இருப்பேன். என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்,  பள்ளிக் கூடங்களில் என்னைக்கு சாதியை எடுக்கிறார்களோ அன்னைக்கு தான் சாதிய கொடுமைகளை தடுக்க முடியும்.

தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்து கட்டியது அண்ணாமலை. பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது. அரசியலில் பணம் வாங்காமல் இருந்தது நான் மட்டுமே. திமுகவை திட்டிக் கொண்டே இருந்தால் மட்டும் பாஜகவால் வளர முடியாது என தெரிவித்தார்.
ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இப்போது மீண்டும் படிக்க சென்று இருப்பதாக கூறுகிறார். பாஜக தலைவராக மட்டுமல்ல, அரசியலுக்கே அண்ணாமலை தகுதியற்றவர் எனவும் காட்டமாக விமர்சனம் செய்தார்.

நீங்கள் பாஜகவில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு, நான் பாஜகவில் இல்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா புகைப்படம், கலைஞர் கருணாநிதி புகைப்படம் என எல்லாருடைய புகைப்படமும் என் வீட்டில் இருக்கும். பிரதமர் மோடியோடு எடுத்த புகைப்படம் வீட்டில் உள்ளதால் நான் பாஜகவில் இருக்கிறேன் என நினைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்தார். அண்ணாமலை அரசியலுக்கே தகுதியில்லாதவர் என்றும் கடுமையாக சாடினார்.