மதுரை:

கவர்ச்சிகரமான காகிதப்பூக்கள் மணக்காது என மு.க ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், நான் பூ அல்ல விதை என நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

அரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் நாளை மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி தனது கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார். இதற்கிடையே, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித்தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், “பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், அவை மணக்காதல்லவா!” என்று எழுதியிருந்தார். இது ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையை விமர்சித்ததாக கருதப்படுகிறது.

மேலும் அக்கடிதத்தில், “தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன்.” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன், “நான் பூ அல்ல விதை, என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்துப் பாருங்கள் வளருவேன்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.