ராஜாவாகவும், மந்திரியாகவும் ஒரே நபர் நாட்டை பரிபாலனம் செய்ய முடியுமா?

‘’முடியும்’’ என்று மூக்கு விடைக்க சவால் விடுகிறார்-தெலுங்கானா முதல்வர்  கே,சந்திரசேகர் ராவ்.

தெலுங்கானாவின் தாயும்,தந்தையுமாக இருப்பவர்.அந்த மாநிலத்தின் முதன் –முதல்-அமைச்சர்.கடந்த ஆண்டு சட்டப்பேரவையை கலைத்து-டிசம்பரில் நடந்த பேரவை தேர்தலில் வென்று மீண்டும் முதல்வர் ஆனவர்.

டிசம்பர்- 13 ஆம் தேதி பதவி ஏற்றார்,தன்னுடன் பதவி ஏற்ற முகமது அலிக்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்கினார்.பதவி ஏற்று 60 நாட்களை கடந்து விட்டார். இதுவரை அமைச்சரவை  விரிவாக்கம் செய்யப்படவில்லை.

தெலுங்கனா மாநிலத்தில் 119 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.மக்கள் தொகை 3 கோடியே 60 லட்சம்.

இரண்டு மாதங்களாக அங்கு ‘இருவர்’ ஆட்சியே நடக்கிறது.பெயருக்குத்தான் ரெண்டு பேர் .உண்மையில் நடப்பது ‘ஒன் மேன் ஷோ’’ தான்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

சுதந்தர இந்தியாவில் அமைச்சரவை சகாக்கள் இல்லாமல் நீண்ட காலம் பரிபாலனம் செய்யும் முதன்- முதல்வர் சந்திரசேகர ராவ் தான்.

மந்திரி பதவி கேட்டு –மற்ற மாநிலங்களில் எல்லாம் குடுமி பிடி சண்டையே நடக்கிறது.கர்நாடகம்-ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு உதாரணம்

ஆனால் தெலுங்கானாவில் எந்த எம்.எல்.ஏ.வும் மந்திரி பதவி கேட்கவில்லை.அவ்வளவு தூரம் பயமுறுத்தி வைத்திருக்கிறார்.

ஒரு மாநிலத்தில் மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களில் 15 சதவீதம் பேரை அமைச்சர்களாக நியமித்து கொள்ள அரசியல் சட்டம் வகை செய்கிறது.அந்த வகையில் பார்த்தால்-16 பேருக்கு  தெலுங்கானாவில் மந்திரி பதவி கொடுக்கலாம்.  ஆனால் இடம் தரப்படவில்லை

இத்தனை பேருக்கு மந்திரி பதவி கொடுக்கலாம் என்று வழி காட்டிய சட்டம் –இத்தனை நாட்களில் கொடுக்க வேண்டும் என்று விதிகளை ஏதும் வகுக்க வில்லை.

அதனால் தான் சந்திரசேகர ராவ் –தனியாக  ஓடிக்கொண்டிருக்கிறார்.

மோடியையும்,ஜெயலலிதாவையும் ஹிட்லர் என்றும்,சர்வாதிகாரி என்றும் வர்ணித்து வசை பாடியோர்-

சந்திரசேகர ராவுக்கு என்ன அடைமொழியை சூட்டப்போகிறார்கள்?

–பாப்பாங்குளம் பாரதி