‘இது யாரோட இந்தியா’ என்னும் தலைப்பில் வைரமுத்து எழுதிய கவிதை என்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்தக் கவிதையில் கடுமையான ஒரு சில வார்த்தைகள் இருப்பதால், சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், அது தான் எழுதியது அல்ல என்று வைரமுத்து அறிவித்துள்ளார்.
அதற்கு முன் அந்த கவிதையை பார்த்துவிடுவோம்:
இது யாரோட இந்தியா வைரமுத்து அணுகுண்டு கவிதை: ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா ?
வி ஐ பி களுக்கே இந்தியா…!!!
பாவனா -வுக்கு
பாவாடை கிழிந்தால்
பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது
நந்தினி
ஹாசினி -களுக்கு
கருவறுக்கப்பட்டாலும்
அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …!!!
அம்பாணி, அதாணி
மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது
இராமையா
மூக்கையா இராமசாமி -கள்
கடன் வாங்கினால்
தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..!!!
அரசியல்வாதிகள்
ஆற்றுமணலை கொள்ளையடித்தால்
சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது
அன்றாட காய்சிகள்
மாட்டு வண்டியில்
மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகிறது..!
கல்வியை தொழிலாக்கி
அதை காசுக்கு விற்று
பணம் பார்க்கும் கபோதிகளுக்கு
கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது
தேர்விலே
பக்கத்தில் இருப்பவனை பார்த்து
காப்பி அடித்தால் மாணவனுக்கு
மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!
போலி நாயகனுக்கும்
அரசியல் வாதிகளுக்கும்
சட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது
சாமானியனுக்கோ சட்டம்
தன் கடமையை செய்கிறது..!
இயற்கையை அழிப்பவன்
இறைவனென போற்றப்படுகிறான்
இயற்கையை காக்க போராடுபவன்
தேசதுரோகியென தூற்றப்படுகிறான் .
ஆக இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?
– இதுதான் அந்த கவிதை. அல்லது கவிதை போன்ற ஒன்று.
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து எழுதியுள்ளதாவது: “இது யாரோட இந்தியா’ என்ற தலைப்பில் என் பெயரிட்டு சில வரிகள் சமூக ஊடகங்களில் உலா வருவதாக என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை என்மீது அன்புகொண்ட அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்!”