தினமலர் ஆசிரியர் அந்துமணி (கி.ராமசுப்பு) அவர்களது பேட்டி நேற்று வெளியானது.

(அந்த பகுதி:  எக்ஸ்ளூசிவ்: ஒரு செய்தித்தாளின் கடமை என்ன?: “தினமலர்” ஆசிரியர் அந்துமணி சிறப்புப்பேட்டி)

இப்போது இரண்டாவது நிறைவுப்பகுதி… 

அந்துமணி

தினமலர் மீது பா.ஜ.க. சார்பு முத்திரை இருக்கிறதே?

இல்லை. நிச்சயமாக இல்லை. எந்தவொரு கட்சி, அமைப்பு, சாதி, மதச் சார்பும் தினமலருக்குக் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், வெறும் வியாபார நோக்கம் மட்டுமே என்பதும் கிடையாது.

தினமலர் இதழை எனது தாத்தா டி.வி.ராமசுப்பையர் துவங்கியதோ தமிழர்களுக்கான உரிமைக்காவே என்பது அனைவருக்கும் தெரியும். “தமிழர்கள் பெருவாரியாக வாழும் நாஞ்சில் நாட்டை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்” என்ற தமிழ் மக்களின் உரிமைக்குரலை வெளிப்படுத்த, துணிச்சலாக திருவதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலேயே தினமலர் இதழைத் துவங்கினார். எங்களது நோக்கம் மக்கள் நலன் என்பதைத்தவிர வேறேதும் இல்லை.

ராஜீவ் – மோடி

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசு பத்திகைகளுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டபோது, “கருப்புச்சட்டம்” என்று தினமலர் உட்பட நாளிதழ்கள் கடுமையாக எதிர்த்தன. பிறகு அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது. சமீபத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அப்படியான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தபோது, தினமலர் உட்பட இதழ்கள் பெரும்பாலும் அதை கடுமையாக எதிர்க்கவில்லை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மோடியைப் பொறுத்தவரை அந்த சட்டத்தை உடனே திரும்பப் பெற்றுவிடுவார் என்று தெரிந்ததாலோ என்னவோ பெரிய அளவில் யாரும் எதிர்க்காமல் இருந்திருக்கலாம். (சிரிக்கிறார்)

ஆனால் தொடர்ந்து தினமலர் மீது ஒரு குறிப்பிட்ட ஆதரவு முத்திரை இருந்து வருகிறது. முன்பு எம்.ஜி.ஆர்., பிறகு ஜெயலலிதா, தற்போது பா.ஜ.க…

இது எல்லாம் சாதி என்கிற குறிப்பிட்ட ஒரு புள்ளியில் இணைவதை உணர்கிறீர்களா?

 (சிரிக்கிறார்.. சில விநாடிகள் பொறுத்து தனது மேற்சட்டையை சற்றே விலக்கிக் காட்டுகிறார். வெற்று மார்பு.) புரிகிறதா?  எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் பூணூல் அணிவதில்லை. அந்த சடங்குகளில் ஈடுபாடு கிடையாது.

ஏற்கெனவே நான் சொன்னது போல மக்கள் நலனன்றி, சாதி உட்பட வேறு எந்த உணர்வும் தினமலருக்கு கிடையாது.

1967ல் இருந்து எடப்பாடி பழனிச்சாமி காலம் வரை மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகளை, சிக்கல்களை எதிர்கொண்டுதான் தினமலர் இயங்கி வருகிறது.

ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஆதரவான இதழ் என்று சிலர் தினமலருக்கு வழக்கம்போல முத்திரை குத்தினர். ஆனால் மாநில அரசின் தவறான நடவடிக்கைகளை வழக்கம்போல அம்பலப்படுத்தி வந்தது தினமலர். இதனால் ஆத்திரமான மாநில அரசு எங்களுக்கு அரசு விளம்பரங்கள் அளிப்பதை நிறுத்தியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினமலர் சார்பாக வழக்கு தொடுத்தோம்.

(சில விநாடி இடைவெளிவிட்டு) ஆனால் தினமலர் ஜெயலலிதா ஆதரவு இதழ் என்ற பொய்ப்பிரச்சாரத்தை அந்த சிலர் அப்போதும் நிறுத்தவில்லை. நாங்களும் கவலைப்படவில்லை.

எம்.ஜி.ஆர்.

தினமலர் உட்பட எல்லா நாளிதழ்களும் சாதாரண தாளில் வெளிவந்துகொண்டிருந்தபோது, எண்பதுகளின் நடுப்பகுதியில் தினமலர் தரமான தாளில் வித்தியாசமான பக்க வடிவமைப்பில் அசரவைக்கும் அச்சாக்கத்தில் வெளிவர ஆரம்பித்தது. அப்போது தினமலருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பெரும் நிதி உதவி அளித்தார் என்று ஒரு பேச்சு உண்டு..

அது வெறும் பேச்சுதான். எம்.ஜி.ஆர். உட்பட எவரும் தினமலருக்கு அப்படி நிதி உதவி அளித்ததில்லை. அளித்தாலும் தினமலர் ஏற்றிருக்காது. ஏற்காது. ஏற்கப்போவதும் இல்லை.

நாளிதழுக்கு என்று கொள்கை, கோட்பாடு வைத்து செயல்படுகிறீர்கள். மக்கள் நலனே முக்கியம் என்கிறீர்கள். எல்லா இதழ்களும் அப்படி இருக்கின்றனவா? அப்படி இல்லாத இதழ்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

எல்லா பத்திரிகையாளர்களும், மக்களுக்கானவர்களாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, பத்திரிகைகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் பணப்பலன் இருக்கலாம்.

எல்லோரும்  ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதில்லையே. ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கிறது?

ஆகவே அது குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை.

மக்களுக்கான நலனை முன்னிறுத்தாத இதழையும், மக்களுக்கான நலனை விரும்பும் இதழையும் மக்கள் ஒரே மாதிரிதான் பார்க்கிறார்கள் என்ற வருத்தம் உங்களுக்கு உண்டா?

அப்படி இல்லை. உங்கள் கருத்து தவறு. மக்கள், தங்களுக்கான இதழை தேர்ந்தெடுப்பதில் கவனமாகவே இருக்கிறார்கள். ஒரு முறை எங்கள் குடும்பத்தில், குறிப்பிட்ட ஒரு நாளிதழைச் சொல்லி அது போல நமது இதழ் இல்லை என்று பேச்சு வந்தது. அப்போது நான் ஊரில் இல்லை.  இந்த விவாதம் என் கவனத்துக்கு வந்தது.

உடனே, குறிப்பிட்ட அந்த நாளிதழ் போலவே தினமலரின் முதல் பக்கத்தை வடிவமைக்கும்படி உத்தரவிட்டேன்.

கோவையில் ஒரு பெரியவர் கடையில் தினமலர் கேட்டிருக்கிறார். எடுத்துக்கொடுத்தவுடன், “இது வேறயாச்சே.. நான் தினமலர்தானே கேட்டேன்” என்று திரும்பிக்கொடுத்திருக்கிறார். இது போல பல இடங்களில் நடந்தது. ஆக, தினமலருக்கென்று தனித்துவம் உண்டு. தனித்துவமான வாசகர்கள் உண்டு.

தொலைக்காட்சி மற்றும் இணையதள பயன்பாடு அதிகரிப்பால் அச்சிதழ்களின் விற்பனை பாதிக்கிறதா?

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அப்படி அச்சிதழ்களின் விற்பனை சரிகிறது. ஆனால் இந்தியாவில் அச்சிதழ்கள்.. குறிப்பாக நாளிதழ்களின் விற்பனை உயர்ந்துகொண்டு இருக்கிறது.  இதை ஆடிட் பீரோ ஆப் சர்குலேசன் மிகத் தெளிவாகச் சொல்கிறது.

பருவமுறை இதழ்களின் விற்பனை சற்றே சரிந்திருக்கலாம். ஆனால் இன்று மட்டுமல்ல.. என்றுமே நாளிதழ்களுக்கு தனி வாசகர் வட்டம் உண்டு.  அது நீடிக்கும். ஆகவே  நாளிதழ்களின் ஆதிக்கம் தொடரவே செய்யும். அதே நேரம் தொ.கா, இணைய இதழ்கள் ஆதிக்கமும் பெருகும்.

செய்தித் தொலைக்காட்சிகள் அதிகரித்துள்ள நிலையில் செய்தி மாசு அதிகரித்துள்ளதே!

ஆமாம்! குறிப்பாக இந்த பிரேக்கிங் நியூஸ் என்று வருகிற சத்தம் மிகுந்த எரிச்சலைத் தருகிறது. நான் பார்ப்பதே இல்லை.  என்னைப் பொறுத்தவரை செய்திக்காக என்.டி.டி.வி. பார்ப்பேன். மற்றபடி காமெடி சேனல்கள்தான் என் சாய்ஸ்.

தினமலர் குழுமத்தில் இருந்து “மலர் டிவி” என்று வெளிவர இருப்பதாக நீண்டநாட்களாக ஒரு பேச்சு இருக்கிறதே..

நீண்ட நாள் திட்டம் அது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் முதல் சாடிலைட் சேனலாக நாங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு நற்பெருமகனால்  தடைபட்டது. (சிரிக்கிறார்) ஆனாலும் தொ.கா. துறையிலும் தடம் பதிப்போம்.

சமூகவலைதளங்களில் தினமலர் கடுமையாக விமர்சிக்கப்படும்போது என்ன நினைப்பீர்கள்?

மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நமது இதழைப் படித்துவிட்டுத்தானே விமர்சிக்கிறார்கள்! ஒரு இதழைப் படிப்பவர்களுக்கு விமர்சிக்க உரிமை உண்டு!

டி.வி. ராமசுப்பையர்

புதிய செய்தியாளர்களுக்கு நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன?

என் மகன் அம்பரீஷ், இதழியல் துறைக்கு வந்தபோது, சில அடிப்படை விசயங்களைச் சொன்னேன். மற்றபடி உனக்கு என்னென்ன புதுப்புது ஐடியாக்கள் தோன்றுகின்றனவோ அதை செய் என்றேன். கொஞ்சநாள் அந்த புது ஐடியாக்கள் என் பார்வைக்கு வந்து போகும். பிறகு அவர் முழுமையாக நேரடியாக இயங்குவார்.

நீச்சலில் பல வகை உண்டு. ஆரம்பத்தில் அடிப்படை நீச்சலை கற்றுத்தருவோம். பிறகு அவரவர் கற்பனைத் திறனுக்கு ஏற்ப அவரவர் ஸ்டைலில் நீச்சல் அடிக்க வேண்டியதுதான்.

தினமலர் முதலாமாண்டு நிறைவு நாளில், நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் குறிப்பிட்டதை இங்கே சொல்லலாம்.

“வகுப்புவாதிகள், மதவெறியர்கள், பிற்போக்கு கும்பல்கள், நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள், தமிழினத்துக்குத் துரோகம் செய்பவர்கள் எமது விரோதிகள். இவர்களை முறியடிப்பதில் தினமலர்  முன்னணியில் நின்று பணியாற்றும்!”

–    இதுதான் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நான் குறிப்பிட விரும்புவது!

(இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் அந்துமணியின் நேரமின்மை காரணமாக தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது பேட்டி. வாய்ப்பு அமையும்போது மீண்டும் சில கேள்விகள்.. அவரது பதில்களோடு பேட்டி வெளியாகும்.)

சந்திப்பு: டி.வி.எஸ். சோமு