மும்பை :

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, இந்தியன் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் கடந்த மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்ற நிலையில், அந்த கட்சியில் இருந்து விலகினார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்-அமைச்சருமான உத்தவ்தாக்கரே முன்னிலையில் நேற்று சிவசேனாவில் இணைந்தார்.

மும்பையில் உள்ள பால்தாக்கரேயின் பூர்வீக இல்லமான மாதோஸ்ரீ வீட்டுக்கு சென்ற ஊர்மிளாவை உத்தவ் மனைவி ராஷ்மி வரவேற்றார். சிவசேனாவில் ஊர்மிளா சேர்ந்ததன் அடையாளமாக அவருக்கு ‘சிவபந்தன்’ கயிற்றை கட்டி ராஷ்மி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஊர்மிளா “கடந்த ஓராண்டாக உத்தவ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசாங்கம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது” என புகழாரம் சூட்டினார்.

“சிவசேனாவில் சேர்ந்து மக்கள் பணியாற்றுமாறு. உத்தவ் அழைத்ததால் அந்த கட்சியில் சேர்ந்துள்ளேன்” என தெரிவித்த ஊர்மிளா, “எனக்கு பதவிப்பேராசை எதுவும் கிடையாது” என்றார்.

அரசியலில் விஷத்தன்மை நிலவுவதாக வருத்தம் தெரிவித்த ஊர்மிள, அதனை முதலில் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நடிகை கங்கனா ரணாவத் குறித்து கேட்டபோது “அவருக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்தாகி விட்டது. அவர் குறித்து பேச இனி ஒன்றும் இல்லை” என ஊர்மிளா பதில் அளித்தார்.

– பா. பாரதி