மதுரை: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து விரைவில் வெளியிடுவேன், 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனது பங்கு கட்டாயம் இருக்கும் என முன்னாள் திமுக தென்மண்டல பொறுப்பாளரும், மறைந்த கருணாநிதியின் மகனும், மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி தெரிவித்து உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி. திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த மு.க.அழகிரி 2014 ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், அதன்பிறகு நேரடி அரசியலில் பங்கேற்காமல் இருந்தார் அவர். அவ்வப்போது அரசியல் பிரவேசம் குறித்து பேசிவரும் அழகிரி, தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவரை பாஜகவுக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு பிடிகொடுக்காமல் இருந்து வரும் அழகிரி, தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இன்று மதுரைச் சேர்ந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர். நல்ல மருது மறைவையொட்டி அவரது இல்லத்துக்கு சென்ற அழகிரி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்.
அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,
பாஜகவில் இணைவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு வதந்திகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என தெரிவித்தார்.
நீங்கள் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு அது தொடங்கும்போது உங்களுக்குத் தெரியும். நான் என்னைப் பின்தொடர்பவர்களுடன் விவாதிக்கிறேன். இந்தத் தேர்தலில் எனது பங்கு இருக்கும். எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் . இம்மாதம் நடைபெறும் கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.
கடந்த சில நாள்களாக மு.க.அழகிரியின் அரசியல் நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவர் அதை மறுத்து வந்தார். இந்நிலையில் வரும் பேரவைத் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.