லக்னோ

‘எனது செயலுக்காக வெட்கப்படுகிறேன்’ என்று பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்தா விசாரணையின்போது கூறியதாக காவல்துறை ஆய்வாளர் தெரிவித்து உள்ளார்.

சின்மயானந்தா கல்லூரியில் படித்து வந்த  உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு சின்மயானந்தா பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கொடுத்த புகாரைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணையைத் தொடர்ந்து சின்மயானந்தாவை  ஷாஜகான்பூரில் உள்ள அவரது  வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரியான ஐ.ஜி. நவீன் அரோரா, மாணவியின் பல்வேறு  குற்றச்சாட்டுகளை சின்மயானந்தா ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து உள்ளார். மேலும், மாணவியின் தந்தை கொடுத்த விடியோவை காட்டி கேள்வி எழுப்பியபோது, அதையும் ஒப்புக்கொண்டவர், தனது செயலுக்காக வெட்கப்படுவதாக தெரிவித்தாகவும் கூறி உள்ளார்.

மேலும், சின்மயானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிவித்தவர்,  சின்மாயந்த் மற்றும் புகார் கொடுத்த சட்ட மாணவி இடையே 230 க்கும் மேற்பட்ட அழைப்புகளின் பதிவுகளையும் காவல்துறை கண்டறிந்துள்ளது  என்றும் கூறி உள்ளார்.