திருப்பத்தூர்: எனது சக்தியை மீறி தமிழகத்தை முன்னேற்ற செயல்படுகிறேன்; எனது உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருகிறேன் என திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

2நாள் பயணமாக வேலூர், திருப்பத்தூர் சென்றுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (29.6.2022) திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து ரிப்பன் வெட்டி முதலமைச்சர் திறந்துவைத்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 110 கோடி நிதியில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் மற்றும்  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சிறிது நேரம் அமர்ந்தார். அத்துடன், புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார்.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள டான் போஸ்கோ பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர்,அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.  நடைபெற்ற விழாவில், பு  16,820 பயனாளிகளுக்கு, 103 கோடியே 42 லட்சத்தி 51 ஆயிரத்தி 441 ரூபாய் மதிப்பில் நலதிட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை முன்னேற்றவே எனது சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன், எனது உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருகிறேன்; மக்களின் முகத்தை பார்த்தால் மாத்திரைகளை தேவையில்லை என பேசினார்.