டெல்லி:
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’  மாத்திரைகள் கொடுப்பது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை தடுக்கும் என்று  ஐசிஎம்ஆர் கடந்த சில மாதங்களுக்கு பரிந்துரைத்தது. அதபோல உலக சுகாதார அமைப்பும் பரிந்துரை செய்தது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்பட  உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின்  ஏற்றுமதி செய்யப்பட்டது.
பின்னர், தகுந்த மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளக் கூடாது என்றும், மருந்து கடைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியது.
இந்த நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
மிதமான மற்றும் நடுத்தர பாதிப்புடைய  கொரோனா நோயாளிகளுக்கு மட்டசூம ஹைட்ராக்சி குளோரோகுயின்(HCQ) பயன்படுத்த வேண்டும்,
தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு அதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மிதமான பாதிப்பு நோயாளிகளில், அதிக உடல்நல பிரச்னையுடைய நோயாளிகளுக்கும், 60 வயதுக்கு குறைவானவர்கள், உயர் ரத்தழுத்தம், நீரிழிவு, நீடித்த நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் நோய், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் உடல்பருமன் பிரச்னை உடையவர்களுக்கும், தீவிர மருத்துவ மேற்பார்வையில் உள்ளவர்களுக்கும்  ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்தலாம்..
நடுத்தர பாதிப்பு நோயாளிகளுக்கு இசிஜி பரிசோதனைக்குப் பின்பே ஹைட்ராக்கி குளோரோ குயினை பயன்படுத்த வேண்டும்.
இது தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், மருத்துவ பரிந்துரை இல்லாமல், ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.