ஐதராபாத்: ஐதராபாத்தில் நவராத்திரியையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள துர்கை அம்மன் சிலையைச் சேதப்படுத்தியது தொடர்பாக ‘புர்கா’ அணிந்த இரண்டு இஸ்லாமிய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது..

நாடு முழுவதும் நவராத்திரியையொட்டி, துர்கா பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தின்  கைரதாபாத் பகுதி யில் நவராத்திரிக்காக வைத்திருந்த துர்கை அம்மன் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அந்த பகுதிமக்கள் கொடுத்த புகாரின்பேரில்,  புர்கா அணிந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அந்த இரு இளம் பெண்களும், அந்த பகுதியில் இருந்த மாதா சிலையை ஒன்றையும் சேதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளம்பெண்கள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உடையவர்களா அல்லது பிஎப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், சுமார் 22முதல் 23வயது வரை உள்ள அந்த இளம்பெண்கள், எந்தவொரு கேள்விக்கும் பதில் தெரிவிக்க மறுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு பெண்களும் நகரத்தில் உள்ள அன்னை மேரி சிலையை சேதப்படுத்த முயன்றதாகவும், பின்னர் நகரின் கைரதாபாத் பகுதியில் உள்ள ஒரு பந்தலில் உள்ள துர்கா தேவி சிலையை உடைக்கச் சென்றதாகவும் ஹைதராபாத் மத்திய மண்டலத்தின் டிசிபி ராஜேஷ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள துர்கா சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.