ஐதராபாத்,
ஆந்திராவில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டுகள் மூலம் பணம் பெறும் வசதி அமல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஒரு சில பங்குகளில் இந்த வசதி இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஐதராபாத்தில் பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டுகள் மூலம் மக்கள் பணத்தை பெற்று செல்கின்றனர்.
கடந்த 8ந்தேதி இரவு முதல் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, புதிய நோட்டுகளை பெற வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.களுக்கும் மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.
பல இடங்களில் போதுமான அளவு பணம் கிடைக்காமலும், சில்லரை தட்டுபாடுகளாலும் மக்கள் அவஸ்தை பட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்
இதன் காரணமாக மக்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு எஸ்பிஐ வங்கி மற்றும் ஒருசில வங்கிகள் இணைந்து நாடு முழுவதும் உள்ள 2500 பெட்ரோல் பங்குகளில் பணம் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தது.
அதைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியின் ‘பாயிண்ட் ஆப் சேல்ஸ்’ கருவியை வைத்திருக்கும் குறிப்பிட்ட 2,500 பெட்ரோல் நிலையங்களில் இத்திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கருவி வைத்துள்ள பெட்ரோல் பங்கில், டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பதால், நாள்தோறும் 50 பேருக்கு மட்டுமே இப்படி பணம் வழங்க முடியும்.
இதுபோல், எச்.டி.எப்.சி., சிட்டிபேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிகாரிகளுடன் பெட்ரோலிய அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனால் மேற்கண்ட வங்கிகளின் பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி வைத்துள்ள 20 ஆயிரம் பெட்ரோல் நிலை யங்களிலும் பணம் பெறும் வசதி, இன்னும் 3 நாள்களில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டுகள் மூலம் பொதுமக்கள் பணத்தை பெற்றுச்செல்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.