ஐதராபாத்:

பழைய ஐதராபாத் நகரத்தை மினி பாகிஸ்தான் என்று வர்ணித்த பாஜ எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் கோஷ்மகால் தொகுதி பாஜ எம்எல்ஏ ராஜா சிங் லோத் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். பேட்டியில், ‘‘தற்போதைய சட்ட நடைமுறையில் தனக்கு உடன்பாடில்லை. தனியார் ராணுவத்தை தயார்படுத்தி வருகிறேன். இதற்காக மற்றவர்களோடு சண்டையிடும் வகையில் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வருகிறேன்’’ என்று அவர் கூறியிருந்தார்.

இவரது பேச்சு அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் இருப்பதாலும், சமூக ஒற்றுமைக்கு கேடு விளைக்கும் வகையில் இருப்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துணை போலீஸ் கமிஷனர் சத்தியநாராயணன் தெரிவித்தார்.

ராஜா சிங் மீது இது போன்று ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கு முன்னதாக, ‘‘வந்தே மாதரம் பாடாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை’’ என்று இவர் பேசியதற்காக போலீசார் சமீபத்தில் இவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

இதற்கு முன்பு, ‘‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரது தலை துண்டிக்கப்படும்’’ என்று பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தர்சக் ஜிகாத் ஒ சதத் அமைப்பை சேர்ந்த முகமது அப்துல் மஜித் என்பவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 12ம் தேதி ஹஜ்ரத் உஜலே ஈத்கா மைதானத்தில் ஆயுதம் மற்றும் லத்தியுடன் ஒரு குழுவினருக்கு பயிற்சி அளித்ததோடு, விஷமத்தனமாக பேசியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுய பாதுகாப்பு என்ற தலைப்பில் இளைஞர்கள், தன்னார்வலர்கள், உறுப்பினர்களுக்கு இவர் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.