ஐதராபாத்

வருடப் பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற சோதனையில் ஐதராபாத் நகரில் குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக 2499 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஐதராபாத் நகர் முழுவதும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வாகன ஓட்டிகள் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டனர்.  ஜுபிளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் உட்பட பல இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  பப்புகளும் பார்களிம் நகரெங்கும் பெருமளவில் இருந்ததால் இந்த சோதனைச் சாவடிகள் நகர் முழுவதுமே அமைக்கப்பட்டிருந்தன.    இந்த சோதனையில் பலர் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர், “இந்த வருடம் இதுவரை இல்லாத அளவுக்கு 2499 வழக்குகள் பதிவாகி உள்ளன.   இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையின் அனைத்து வாகனம் நிறுத்துமிடமும் நிரம்பி வழிகின்றன.     மொத்தம் 276 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.    அத்துடன் 1309 இரு சக்கர வாகனங்களும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மது அருந்திய சிலர் வாடகைக்காருக்கு காத்திருக்காமல்  ஆட்டோ ரிகஷாக்களில் பயணம் செய்துள்ளனர்.   அப்போது சோதனை செய்ததில்  பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்களும் மது அருந்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.    இது போல 86 ஆட்டோ ஓட்டுனர்கள் மேல் வழக்கு பதியப்பட்டு அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   ஐதராபாத் காவல் துறை சரகத்தில் 1683 வழக்குகளும், சைபராபாத் பகுதியில் 582 வழக்குகளும்,  ரச்சகொண்டா பகுதியில் 234 வழக்குகளும் பதிவாகி உள்ளன.” என தெரிவித்துள்ளார்.

இது தவிர தில்குஷ்நகர் பகுதியில் ஆண்கள் விடுதியில் தங்கி இருந்த 30 இளைஞர்கள் மது அருந்தி விட்டு அருகில் உள்ள பெண்கள் விடுதியில் கலாட்டா செய்துள்ளனர்.   அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறி உள்ளது.   காவல்துறையினர் அங்கு விரைந்து அவர்களை அடித்து விரட்டி உள்ளனர்.